அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

உச்சிபிள்ளையார் வரலாறு

About Images

     இராமர் பட்டாபிசேகத்திற்கு சென்ற விபீஷணர், இராமர் ஞாபகார்த்தமாக கொடுத்த ஸ்ரீரங்கநாதர் விமானத்தை, அந்தணர் உருவம் கொண்டு நின்ற சிறுவனிடம் கொடுத்துவிட்டு, காவிரிக் கரையில் நீராடச் சென்றார். அந்தணச் சிறுவன் சிறிதுநேரம் கையில் வைத்திருந்து விட்டு, பின் விபீஷணர் வரும் முன்னரே பூமியில் வைத்துவிட்டு மலையின் உச்சியில் ஏறி ஓடினான். திரும்ப வந்து பார்த்த விபீஷணர் அரங்கர் விமானத்தை எடுத்து பார்க்க அதை எடுக்க இயலாமல் நிலைபெற்றுவிட்டது. கோபங்கொண்ட விபீஷணர் அந்தணச் சிறுவனைத் துரத்தி சென்று தலையில் குட்டினார். அந்தணச் சிறுவனே உச்சி விநாயகராக காட்சிக் கொடுக்க அரங்கநாதர் திருச்சிராப்பள்ளியிலேயே இருக்கவேண்டும் என்பது விநாயகப் பெருமான் திருவுளம் என அறிந்தார். இப்புராணம் விநாயகர் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போதும் உச்சிவிநாயகர் தலையில் 2.5 அங்குல அளவிலான குட்டுப்பட்ட பள்ளம் உள்ளது.

மலையின் கீழ்ப்புறம் தற்போதும் விபீஷணர் பாதம் இரண்டு பாறையின் மீது உள்ளது. உச்சிவிநாயகர் சன்னதியும் படிகளின் தோற்றமும், விநாயகர் துதிக்கைப்போலவே உள்ளது அரிய சிறப்பாகும்.

மேலும் உச்சிவிநாயகர்சன்னதியின் பின்புறம் இன்றும் சமண முனிவர்களின் கற்படுகைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்த படுக்கையிலிருந்த சமண முனிவர்களின் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் ஐந்தாம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது.