அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

இறைவன் மேற்கு முகம் திரும்பிய வரலாறு

About Images

     திருமூலர் மரபில் வந்த சாரமாமுனிவர் செவ்வந்திமலர் கொண்டு வழிபட்ட காரணத்தினால் செவ்வந்திநாதர் என அழைக்கப்பட்ட தாயுமானசுவாமி, சாரமாமுனிவர் பொருட்டு கிழக்குமுகமாக இருந்த அவர் மேற்முகமாக திரும்பிய வரலாறு பின்வருமாறு

     திருமூலர் மரபில் வந்த சாரமாமுனிவர் சிராமலைப் பெருமானுக்கு நந்தவனம் அமைத்து அதில் செவ்வந்தி மலர் பயிரிட்டு, நாள்தோறும் அம்மலரால் சிராமலைப் பெருமானை வழிபட்டு வந்தார். செவ்வந்தி மலர் கொண்டு வழிபட்ட காரணத்தால் சிராமலை பெருமானுக்கு செவ்வந்திநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பூ வாணிகம் செய்யும் ஒருவன் சாராமாமுனிவர் நந்தவனத்தினுள் புகுந்து செவ்வந்தி மலர்களை எல்லாம் கொய்து அந்நாளில் உறையூரை ஆட்சிசெய்து வந்த பராந்தகச் சோழனுடைய தேவிக்கு கொடுத்து வந்தான். செவ்வந்திமலர் களவுபோவதைச் சாரமாமுனிவர் மறைந்திருந்து கவனித்துக் களவின் காரணம் அறிந்து, அரசனிடம் முறையிட்டார். அரசன் கள்வனை அழைத்து, கண்டித்துத் தண்டிக்கவிலை. சாரமாமுனிவர் இந்தச்செயல் குறித்துச் செவ்வந்தி நாதப்பெருமானிடம் முறையிட்டார்.

மண்மாரி்

     சாரமாமுனிவர் முறையிட்டதனால் சிராமலைப் பெருமான், கிழக்கு முகமாக இருந்தவர், மேற்கு முகமாகத் திரும்பி, மேலும் காற்று, மேகங்கள் கொண்டு, உறையூர் மீது மண்மாரி பொழியச் செய்தார். அரசனும், அரசியும் அரண்மனையை விட்டு வெளியேறினர். உறையூர் முழுவதும் மண்மாரியால் அழிந்தது. அந்த மண்மாரி அரசனைப் பின் தொடர்ந்தது. அரசன் இறந்துபோனான். அவன் மனைவி கருவுற்றிருந்தாள்

    பின்பு உறையூரில் எழுந்தருளியிருக்கும் காவல்தெய்வம் வெக்காளிஅம்மன், இறைவனை வேண்டி சாந்தப்படுத்தியதாலும் மண்மாரி பொழிவது நின்று உறையூர் பெரும் அழிவிலிருந்து காக்கப்பட்டது. மன்னன் மனைவி காவிரியில் விழுந்து உயிர் விடத்துணிந்தாள். அந்தணர் ஒருவர் பாதுகாத்து அடைக்கலம் கொடுத்தார். அவள் கள்வன் மலர் திருடிய வேலையில் தேவதத்தன் சங்கு ஊதி தெரிவித்திருக்கிறான். அதன் அடையாளமாக சங்கு ஊதும் தேவதத்தன் கற்சிற்பம் கொடிமரத்து மண்டபத்தில் உள்ளது. இவ்வாறு இத்தலத்து இறைவன் தவறுகளை தண்டித்தும், அன்புடன் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்தும் நிக்கிரக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகின்றார். இறைவன் கிழக்குமுகமாக இருந்த காரணத்தினால் இன்றளவும் மேளவாத்தியம், நாதஸ்வரம், மற்றும் பாரயணம் கிழக்குமுகமாகவே நடைபெற்றுவருகிறது. எனவே இந்நிகழ்ச்சியை சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விழாநாளில் மாலை 6-00 மணி அளவில் தாயுமானவர் சந்நதியிலிருந்து சாரமாமுனிவர் மற்றும் நாககன்னிகைகள் உற்சவர் புறப்பாடு செய்யப்பட்டு அம்மன் சந்நதி வலம்வந்து சுவாமி சந்நதி முன்பு இறைவன் மேற்குமுகம் திரும்பிய ஐதீகம் வாசிக்கப்பட்டு, பாடல்கள் பாடப்பட்டு, செவ்வந்திமலர்களால் அர்ச்சனைசெய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும. இறைவன் கிழக்குமுகம் இருந்தததை தெரிந்துகொள்ளும் வகையில் இன்றும் நிலைக்கதவு மூலஸ்தானத்திற்கு பின்புறம் உள்ளது.