அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

மலைக்கோயிலின் சரித்திர வரலாறு

About Images

     நவீனக் கருவிகள் இல்லா அன்றைய காலத்திலேயே இப்பெருங்கோட்டைக் கோயில் 417-படிகளுடன் 273-அடி உயரத்தில் உலகக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்று முக்கிய தத்துவம் பெற்றதாகவும், ஒரு புராதான சின்னமாகவும், இம்மலைக்கோயில் விளங்கி இருக்கிறது. புவியியல் ஆய்வுப்படி இம்மலை 3500-பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது தொப்கிறது. சோழர், பல்லவர், பாண்டியர், பிற்காலச் சோழர், நாயக்கர், மராட்டியர் காலகட்டடக் கலைப்பாணிகளைக் கொண்டு விளங்குகிறது. மன்னர்கள் மற்றும் குருநில மன்னர்கள் பாதுகாப்பில் இருந்த இத்திருக்கோயில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துறவியர் பராமரிப்பிலும் இருந்திருக்கின்றது.

     இம்மலை புராணச் சிறப்புடையது கொடும்பாளுர் என்ற இடத்திலிருந்து கற்களும் பிற பொருட்களும் கொண்டு கட்டப்பட்டன என்று தெரிகிறது. இம்மலையின்மேல் உள்ள சிவலிங்கம் தானாக வளர்ந்தது என்பர். இராமாயணம் காலத்திலேயே இம்மலை இருந்ததாக தெரிகிறது. திரிசிரன் என்ற அசுரன் இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை பூஜித்து வந்தான் என்பது புராண வரலாறு. மேலும் தாயுமானவர் திருக்கோயில் கருவறை திருப்பணி திரிசிரன் செய்ததாகும். அதனால்தான் பிற்காலத்தில் இம்மலையைச் சூழ்ந்து அமைந்த நகரத்திற்கு திரிசிரபுரம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சோழர் ஆட்சியியில் உறையூர் தலைநகராக இருந்தபொழுது சாரமாமுனிவர் என்பவர் சிவலிங்கத்தை செவ்வந்தி மலர்க்கொண்டு பூஜித்து வந்தார். அதனால் இறைவன் செவ்வந்திநாதர் என்று அழைக்கப்பட்டார். இறைனை பூஜை செய்வதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் உள்ள செவ்வந்திமலர்களை களவாடிய கள்வனைப்பற்றி உறையூரை ஆட்சிசெய்த பராந்தக சோழனிடம் முறையிட அவன் கள்வனை அழைத்து தண்டிக்காத காரணத்தால், முனிவர் இறைவனிடமே முறையிட கிழக்கு முகமாக இருந்த சிவன் மேற்குமுகமாக திரும்பி உறையூரை மண்மாரி பொழிந்து உறையூர் அழிந்தது. அன்றிருந்த கிழக்கு வாசல் பகுதி தெரியும் வண்ணம் நிலை மட்டும் உள்ளது. இக்கிழக்கு வாசலை கடந்து, மேற்கு முகமாக உள்ள மூலவர் இறைவனை தரிசிக்கலாம். அக்காலத்தில் மலையைச் சுற்றி சோலைகளும், சிறு காடுகளும் அருகாமையில் பல சிற்றூர்களும் இருந்திருக்கின்றன. சுமார்1300-ஆண்டுகளுக்கு முன் பல்லவராஜ்ஜியம் தெற்கே திரிசிரபுரம் வரையில் பரவியிருந்திருக்கின்றன. பல்லவர் ஆட்சியில்தான் தென்னிந்தியாவில் கருங்கல் கோயில்கள் கட்டப்பட்டன என்பது சரித்திரக்கூற்று. சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம் முதலிய இடங்களில் மலைகளை வெட்டி, குடைந்து கோயில்களை அமைத்தவற்றில் சிறப்பிடம்பெறுவது இம்மலைக்கோயிலில் உள்ள குடைவரைகள் பல்லவர்காலத்தில் மலைமேல் கருங்கல் கோயிலைக் கட்டியதுடன், கருங்கல் பாறையைக் குடைந்து மலைமீது ஏறிச் செல்வதற்கு நல்ல வழியையும் அமைத்திருக்கிறார்கள். பல்லவர் காலகட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள இம்மலைக்கோயிலில் உள்ள குடைவரைகளை அமைத்தவர் சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தவர். சமணனாக இருந்த மகேந்திரவர்மன் சைவமானதை, இம்மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. அது லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் அரசன் இந்த லிங்கத்தினால் புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம் உலகத்தில் நீண்ட நாள் நிலை நிற்பதாக எனக் கூறுகிறது. பின்பு நாயக்க மன்னர்கள் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி நகரம் உருவாக்கப்பட்டது. மலையைச் சுற்றி நாற்புற வீதிகளும், கடைத்தெரு அடங்கிய வெளிவீதிகளும் ஏற்பட்டன.

     உச்சிமலைக்கு அருகே வலப்பக்கத்தில் உள்ள 16-கால் மண்டபம் அன்றைய ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுப் படையினர் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பகுதியாக பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் நடந்த போர்க்காலங்களில் இம்மலைக்கோயில் வெடிமருந்துக் கூடமாக இருந்திருக்கிறது. இதற்கு அடையாளமாக மலைமேல் உள்ள குகைக்கோயில் தரையில் சில குழிகள் உள்ளன. உச்சிமலைக்குச் செல்லும் பாதையில் மேல்புறம் பாறையில் மீன்வடிவம் உள்ளது. இது பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு அடையாளமாக இருக்கலாமெனக் கூறப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப்பட்ட மலைக்கோட்டை சுமார் 200-ஆண்டுகாலம் பல போர்கள் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது. இத்திருக்கோயில் மேல்குடைவரைக் கோயில் சுவரில் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேம்பையர் கோன் நாராயணன் என்னும் பெரும் வணிகர் இயற்றிய சிராமலை அந்தாதி என்னும் நூல் முழுவதும் கல்வெட்டாக உள்ளது. எனவே இத்திருத்தலத்தை முதல் தமிழ் கோயில் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். முற்காலச் சோழர், பல்லவர், பாண்டியர், நாயக்கர்கள், முதலியோர், கல்லிலே கனல் எழுப்பி தங்கள் அழியாத எண்ணத்தை அழியாத வண்ணத்தில் படைத்திருக்கின்றனர்.