அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

புராணங்கள் விளக்கும் பூர்வ வரலாறு

About Images

     மிகப்பழங்காலத்தில், இயற்கையின் திருக்கோயிலாக விளங்கும் திருக்கயிலை மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டுத் தேவர்களும் முனிவர்களும் வந்தனர்.

கயிலைமலை

     அப்பொழுது அங்கு வந்த ஆதிசேடனை, அமரர்கள் புகழந்து பேசினர். அதைக்கேட்ட வாயுதேவன் பொறாமையால் ஆதிசேடனை இகழ்ந்து பேசினான். செவியில்லாதவன், கால்கள் இல்லாதவன், இரட்டைநாக்குகள் உடையவன் என்று இகழ்ந்துரைக்கக் கேட்ட, சேடன், வாயுதேவனுடன் போட்டியிட்டான். ஆதிசேடன் தன் உடலால் கயிலைமலையை இறுகப்பிணித்துக் கொண்டான், வாயுதேவன், தன் ஆற்றல் வெளிப்படப்பெருங்காற்றை வீசினான். உலகங்கள் அதிர்ந்தன.

     அப்பொழுது, கயிலாயமலையிலிருந்து மூனறு பகுதிகள் பிரிந்து, பறந்தன. அவைகளில் ஒன்று, திருக்காளத்தியிலும், மற்றொன்று திரிசிராமலையிலும், வேறொன்று திரிகோணமலையிலும் விழுந்தன.

தென்கயிலாயங்கள்

     திருக்கயிலையின் துண்டுகள் விழப்பெற்றமையால், இவை மூன்றும் தென்கயிலாயங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இவற்றுள், திருக்காளத்தி, திரிகோணமலை இவைகளுக்கு நடுவே, நடுநாயகமாகத் திரிசிராமலை இருப்பதால், இது மலைகளுள் நாயகமலையாகும்.