அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

அருளாளர் தாயுமானஅடிகள் வரலாறு

About Images

     இத்தல இறைவன் தாயுமான தயாபர மூர்த்தியின் அருளால் தோன்றியவர்தான் அருளாளர் தாயுமான அடிகள். அவருடைய வரலாறு பின்வருமாறு. தமிழகம் கி.பி 1529-ல் தமிழ் வேந்தர்களின் ஆட்சியை இழந்தது. சந்திரவம்ச அரசர்களில் சந்திரசேகர பாண்டியனும் சூரியகுல மன்னர்களில் வீரசேகர சோழனும் மாறுபாடு கொண்டு விஜயநகர வேந்தரான கிருஷ்ணதேவராயரிடம் நாட்டை இழந்தனர். தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தோன்றியது அவர்களில் விஸ்வநாத நாயக்கர் முதல் நாயக்கர் ஆவார். மதுரையை தலைநகராகக் கொண்டு நாயக்க மன்னர்கள் ஆட்சிசெலுத்தினர். அதில் 11-வது பட்டமாக அரங்ககிருஷ்ணப்ப நாயக்கர் கி.பி 1682-ல் அரியணை ஏறினார். இவரே இராணி மங்கம்மாளின் அருந்தவ புதல்வராவார். இராணி மங்கம்மாள் தனது குமாரனுக்கு தமிழ்நாட்டு தலங்களை பற்றியும், தவசீலர்களைப் பற்றியும் நன்கு போதித்திருந்தார். வேதாரண்யத்தில் உள்ள திருமறைக்காட்டில் வேதங்கள் அடைத்த கதவை தேவாரம் மொழிந்து அப்பர் திறக்கப்பாடினார். சம்மந்தர் அடைக்கப்பாடினார். இதைப்பற்றி கேள்வியுற்று இருந்த அரங்க கிருஷ்ணப்ப நாயக்கர் அத்திருக்கோயில் வழிபாட்டிற்காக பரிவாரத்தோடு சென்றார். கேடிலியப்பர் அப்போது அத்திருக்கோயிலில் கங்காணியாக பணியிலிருந்தார்.

    புத்திரர் இன்றி இருந்த கேடிலியப்பர் தம்பதியினர் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சென்று பிள்ளை வரம் வேண்டி கடுந்தவம் புரிந்தனார், அதன்பயனாக கஜவல்லி அம்மையார் 15-5-1692-ம்ஆண்டு உலகெல்லாம் உய்ய வந்த திருக்குமாரரைப் பெற்றார். அவருக்கு மலைக்கோட்டை வடமொழி, தெலுங்கு ஆகிய மும்மொழிகளையும் ஐயம் திரிபரக் கற்றுத் தேர்ந்தார். திருமுறை நூல்களையும், மெய்கண்ட சாஸ்திரங்களையும் கற்றார். திருச்சிராப்பள்ளியில் அப்போது வடமொழி தென்மொழியில் சிறந்திருந்த சிற்றம்பல தேசிகர் என்பவரிடம் முறையாகப் பயின்றார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கும் பஞ்சபூதத்தலங்களுள் நீர்த்தலமான திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுக்கும் சென்று வழிபடுவது அவரது நித்திய கர்மங்களுள் ஒன்றாய் அமைந்திருந்தது. கி.பி 1689-ல் அரங்க கிருஷ்ணப்பர் மரணம் அடைந்தார். அப்போது அவரது மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தாள் இராணி மங்கம்மாள் கருவிலிருந்து சிசுவை இளவரசராக மதித்து அரியணை ஏறி ஆட்சிபுரிந்தாள். இவள் அரசுசெலுத்திய நாயக்க மன்னர்களின் வரிசையில் 12-வது ஆவாள். இவள் 15-ஆண்டுகள் அரசாண்டபின் இவளது பேரனும் அரங்ககிருஷ்ணப்ப நாயக்கர் மகனுமான விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தமது 15-வது வயதில் அரியணை ஏறி திருச்சிராப்பள்ளியை தலைநகராகக் கொண்டு 1704-முதல் ஆளத் தொடங்கினார் இந்நிலையில் சம்பிரதி கேடிலியப்ப பிள்ளை மரணம் அடைந்தார். அப்போது தாயுமானவர்க்கு அகவை 18-ஆகும். காலியாக இருந்த சம்பிரதி பதவிக்கு தாயுமானவரே தகுதியானவர் என முடிவு செய்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தாயுமானவரை சம்பிரதியாக நியமித்தார். தாயுமானவர் அரசவைக் கணக்கர் பணியில் தமது தந்தையாரையும் விஞ்சுமளவிற்கு இருந்தார். தாயுமானவர் அரசபதவி வகித்தாலும் மனம் இறைவனை நோக்கியே இருந்தது.

    திருச்சிராப்பள்ளியில் அப்போது சைவதிருமடங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்று மௌனத்தம்பிரான் சுவாமிகள் மடம் இது ஆதியில் சாரமாமுனிவர் மடம் என்ற திருப்பெயரால் வளர்ந்தோங்கி பின்னர் மௌனத்தம்பிரான் சுவாமிகள் செல்வாக்கால் மௌனத்தம்பிரான் மடம் என வழங்கலாயிற்று அம்மடத்தை சேர்ந்த தம்பிரான்களோடு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு அடிக்கடிச் சென்று வந்த தாயுமானவர் பழகும் வாய்ப்பு கிட்டியது. தாயுமானவர் மலைக்கோட்டை தாயுமானசுவாமியை வழிபட்டு திரும்பும் போது மௌனகுருவை கண்டு காந்தம் போல் அவரால் தாயுமானவர் மலைக்கோட்டையில் உள்ள தட்சிணாமூர்த்தி முன்பாக நிஷ்டைப் பயிற்சியில் பொருள் வணக்கமும் பரிபூரணானந்தமும் பாடினார். மௌனகுருவின் பெருமைகளை வியந்து பாடிய மௌனகுரு வணக்கம் என்ற திருப்பதிகமும் இக்கால கட்டத்தில் பாடப்பெற்றதேயாகும்.

    இராமனாதபுரத்திற்கு அருகில் உள்ள இலஷ்மி புரத்தில் அவர் நிஷ்டையிலிருந்து 15-01-1742-ல் சமாதி அடைந்தார். அவர் நிஷ்டையில் இருப்பதை அறியாமல் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், நிஷ்டையிலிருந்து விழித்த தாயுமானவர் விழித்தெழுந்து தீயெறிவதைக் கண்டும் வெளிவராமல் அவ்வாறே சமாதியானார் என்றும் சிலர் கூறுவதுண்டு. இத்தலத்தில் தாயுமானஅடிகள் இறைவனடி சேர்ந்த தை மாத விசாக நட்சத்திரத்தில் இவரது முக்திப்பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது

     விழா தினத்தில் மௌனமடத்தில் நண்பகல் 12-00 மணியளவில் மௌனகுரு மற்றும் தாயுமானவர் உற்சவ திருமேனிக்கு, அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு 8-00 மணியளவில் மௌனகுரு மற்றும் தாயுமானஅடிகள் உற்சவ திருமேனி திருவீதி உலா, ஓதுவார் மற்றும் நாதஸ்வர இன்னிசையுடன் நடைபெறுகின்றன. மேலும் விழா நடைபெறும் இரண்டு நாட்களிலும், ஆலய நூற்றுக்கால் மண்டபத்தில், ஆன்மீகச் சொற்பொழிவு, மங்கள திருமுறை இன்னிசையும் நடைபெறுகின்றன.